பண்டாரவளை-பதுளை பிரதான வீதியின் 7ஆவது மையில் கல், பதுளை உடுவரை தமிழ் வித்தியாலயத்துக்கு முன்னால் இன்று (29) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், டபிள்யூ.எம்.பிரியலதா (47) என்ற ஆசிரியை ஸ்தலத்திலே பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை, உடுவரை தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த ஆசிரியையே இவ்விபத்தில் பலியாகியுள்ளார்.
விபத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாகவும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை முடிவடைந்து வீடு செல்வதற்காக பிரதான வீதியில் காத்திருந்த போது, அவ்விடத்துக்கு வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸில் ஏற முற்பட்டுள்ளார். இதன்போது பஸ்ஸூக்கு பின்னால் வந்த லொறி ஒன்று பஸ்ஸூடன் மோதியதையடுத்து ஆசிரியை தவறி கீழே விழுந்து பஸ்ஸூக்கும் லொறிக்கும் இடையே நசுங்குண்டு ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.
மேலும், அவருடன் இருந்த இரு ஆசிரியைகளும் படுகாயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பஸ் மற்றும் லொறியின் சாரதிகளை கைதுசெய்துள்ளனர்.