ஈராக்கின் டியாலா மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 40 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு டேஷ் ரக்ஃபிரி தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஈராக்கின் டியாலா மாகாணத்தின் பிரிஷ்டெஹ் மாவட்டத்தில் உள்ள கிழக்கு முக்தாதியா நகரில் அமைந்துள்ள மசூதி ஒன்றினுள்ளேயே இந்த குண்டுத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட டியாலா மாகாண பாதுகாப்பு வட்டாரங்கள், நேற்று உள்ளூர் நேரப்படி நண்பகலில் இறுதிச் சடங்கு ஊர்வலம் ஒன்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாவும், இதன்போது 42 மக்கள் காயமடைந்துள்ளதாவும் தெரிவித்துள்ளன.
இதேவேளை முக்தாதியா ஆளுநர் அட்னான் அல்-தமிமி இது தொடர்பில் குறிப்பிடுகையில், “குறித்த பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தாக்குதல் இடம்பெற்றதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து சடலங்களை அப்புறப்படுத்தியதோடு, காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்” எனத் தெரிவித்தார்.